*உள் விவகார அலுவல்கள் அலகு
பிரதேச செயலகம் - வடமராட்சி கிழக்கு*
*வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான உள் விவகார அலுவல்கள் அலகின் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு*
 
திகதி: 14.10.2026
நேரம்: மு.ப. 10.00 மணி – பி.ப. 12.30 மணி
தலைமை: திரு. க. ஜெயதாஸ், கணக்காளர் மற்றும் அலகின் தலைவர்
வளவாளர்: திரு. த. சிறிதரன், நேர்மைத்திறன் அலுவலர், உள் விவகார அலுவல்கள் அலகு.

 

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் உள் விவகார அலுவல்கள் அலகினால் 14.10.2026 அன்று கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு நடாத்தப்பட்டது. அலகின் தலைவர் திரு. க. ஜெயதாஸ் (கணக்காளர்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், கமக்காரர் அமைப்புக்கள், சமுர்த்தி வங்கிச் சங்கங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
உள் விவகார அலுவல்கள் அலகின் நேர்மைத்திறன் அலுவலர் திரு. த. சிறிதரன் (நிர்வாக உத்தயோகத்தர்) அவர்களால் உள் விவகார அலுவல்கள் அலகின் நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகள், இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு, அதிகார துஷ்பிரயோகம், ஆவண முறைகேடுகள், அரச வளங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், நலன் முரண்பாடு மற்றும் பொறுப்பற்ற பணிச் செயற்பாடுகள் தொடர்பாக விரிவான விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், இலஞ்சம் கோருதல், ஊழல் செயற்பாடுகள், அதிகார துஷ்பிரயோகம், கடமைகளை முறையாக நிறைவேற்றாமை, சேவைகளில் நியாயமற்ற தாமதம் மற்றும் பொறுப்பற்ற பணிச் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பாக முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது. இவ்விடயங்கள் உள்ளடக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களும் செயலமர்வில் பங்குபற்றியவர்களுக்கு வழங்கப்பட்டன.
அத்துடன், பொய்யான அல்லது ஆதாரமற்ற முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இதனுடன் இணைந்ததாக, காணொளி மூலமான விழிப்புணர்வு நிகழ்வும் நடாத்தப்பட்டு, நேர்மையான பொதுச் சேவை, இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதன் அவசியம், அரச உத்தியோகத்தர்களின் பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், கிராம மட்டத்தில் நேர்மைத்தன்மையை ஊக்குவிப்பதற்காக நடைமுறைப்படுத்தக்கூடிய ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை ஒரு மாத காலத்தினுள் சமர்ப்பிக்குமாறும், செயலமர்வில் பெற்றுக்கொண்ட அறிவைத் தத்தமது கிராமங்களில் உள்ள பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக அவர்களை அழைத்து விழிப்புணர்வுக் கூட்டங்களை நடாத்துமாறும் பிரதிநிதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இச்செயலமர்வின் மூலம் கிராம மட்ட அமைப்புக்களின் பங்களிப்புடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்தி, நேர்மையானதும், வெளிப்படையானதும், பொறுப்புக்கூறல் மிக்கதுமான பொதுச் சேவையை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
இச்செயலமர்வின் சில பதிவுகள்...
 
1 2 3 4

குடியுரிமை சாசனம்

Scroll To Top