எங்கள் பார்வை

"பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான உன்னத சேவையினை வழங்குதல்"

எங்கள் நோக்கம்

"நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை நோக்கிய நவீன தொழில்நுட்பம் மற்றும் உயர்தர வளப் பாவனையுடனான விளைதிறன் மற்றும் வினைத்திறன் மிக்க  பொதுமக்கள் சேவையினை வழங்குதல்"

01 புவியியல் அமைப்பு

தமிழர் பண்பாட்டிற்குப் பெயர்போன யாழ்குடாநாட்டில் வடமராட்சிக்கிழக்கில் அமைந்துள்ள பிரதேசமானது தனித்துவமான புவியியலமைப்பினைக் கொண்டுள்ளது. அதாவது புவியியல் அமைவு ரீதியில் இப்பிரதேசமானது யாழ்ப்பாண மாவட்ட கரையோரப்பகுதிகளில் ஒன்றாக ஒடுங்கிய நீண்ட வடிவமைப்பில் விளங்குகின்றது. வடக்கே வல்லிபுரம் தொடக்கம் தெற்கே சுண்டிக்குளம் தொடக்கம் ஏறத்தாழ 53.5 நீளமும், 2.5. அகலமும் கொண்டுள்ளது. வடக்கே இந்துசமுத்திரப் பெருங்கடலையும், தெற்கே தொண்டமனாறுக் கடல்நீரேரியையும், கிழக்கே நன்னீர்த் தொடுவாயினால் சூழப்பட்டும் மேற்கெல்லையாக வடமராட்சிப் பிரதேசத்தையும் கொண்டமைந்துள்ளது. மருதமும் நெய்தலும் ஒருங்குசேரப்பெற்ற நிலப்பரப்பைக்கொண்ட இப்பிரதேசம் மணற்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரை 18 கிராம அலுவலர் பிரிவுகளின் கீழ் 39 கிராமங்களைக் கொண்டமைந்துள்ளது.

சுண்ணாம்புக் கற்பாறைத் தொகுதிகள் மற்றும் அடையற்பாறைவகைகள் என்பனவும் கடற்கரை சார்ந்து மணல்மண்ணும் தொண்டமனாறு கடல்நீரேரி சார்ந்து களிமண்ணும் கொண்டதோடு சில இடங்களில் சிலிக்காமணற்படிவுகளையும் கொண்டுள்ளது. மூன்று பக்கங்களும் கடல் மற்றும் கடல் நீரேரியினால் சூழப்பட்டிருந்தாலும் பிரதேசம் முழுவதும் நன்னீர் வளத்தினைக் கொண்டுள்ளது சிறப்பானதாகும். இவ்விதம் இயற்கை வளங்கள் நிறைந்ததாகவும் பாரம்பரியத்தொன்மை மிக்கதாகவும் நெய்தல் சார்ந்த கடற்பரப்பை பெரும்பான்மையாகவும், முல்லைசார் காடும் மருதம்சார் வயலும் சிறுபான்மையாகவும் கொண்டமைந்துள்ள இப்பிரதேசம் காலத்திற்குக்காலம் இடம்பெற்ற யுத்த அனர்த்தம் மற்றும் இயற்கை நெருக்கடிகளால் பெரிதும் பாதிப்புற்று இன்று தன்னை மீள்கட்டமைப்பதில் முனைப்புடன் செயலாற்றி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

02 சமூக அமைப்பும் மக்கள் வாழ்வியலும்

பிரதேசத்தின் தரைத்தோற்ற அமைப்பிற்கேற்ப மக்கள் மேற்கொள்ளும் தொழிலின் அடிப்படையில் சமூகக்குழுக்களாக இயங்கிவருகின்றனர். குறிப்பாக கடலை நம்பி வாழும் மீனவர் சமூகம் பெரும்பான்மையாகவும் தெற்கே உழவுத்தொழில் புரியும் விவசாயிகளும் பிரதான சமூகத்தவர்களாக உள்ளனர். இவர்களைத்தவிர ஏனைய சிறுகைத்தொழில்கள், வியாபாரம் மற்றும் சீவல் எனப்படும் கள்ளிறக்கும் தொழில் புரியும் குழுவினரும் வாழ்கின்றனர்.

பிரதேச சமய அமைப்பினை நோக்கின் இந்து மற்றும் கத்தோலிக்க சமயத்தினரே இங்கு பிரதானமாக வாழ்கின்றனர். இருப்பினும் இன்று காலமாற்றத்தால் பல கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவ சபைகளும் உருவாகி வருவதைக் காணமுடிகின்றது.

கல்வித்துறையை எடுத்துக்கொண்டால், அன்று முதல் இன்று வரை இப்பிரதேசம் கல்வியில் சிறப்புற்று விளங்குகின்றது. இதனால் பல அரச உத்தியோகத்தர்களும் இங்கு பெருகிவருகின்றனர். உயர்தரப்பாடசாலைகள் இரண்டும் ஏனையவை இடைநிலை மற்றும் ஆரம்பப்பள்ளிகளாகவும் இயங்கிவருகின்றன.

இவ்விதம் கல்வி. சமயம், தொழில்சார் சமூக அமைப்பு என்பனவற்றினால் கட்டமைக்கப்பட்டுள்ள இப்பிரதேசம் பாரம்பரிய பண்பாட்டுப்பேணுகை கொண்டதாக விளங்குகின்றது. இதில் இப்பிரதேச இயற்கைவளங்களும் செல்வாக்கு செலுத்துகின்றன. குறிப்பாக நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம், மணற்காடு புனிதஅந்தோனியார் ஆலயம், புல்லாவெளி புனிதசெபஸ்தியார் ஆலயம், சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயம் என்பன தொல்பொருட்திணைக்களத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சின்னங்களாக விங்குகின்றன. அதுமட்டுமல்லாமல் சோழர்கள் இப்பிரதேசத்தை ஆண்டதற்கான சான்றுகள் இருந்ததற்கான வாய்வழிக்கதைகளையும் அறிய முடிகின்றது.

இவ்வகையில் பறவைகளின் சொர்க்கபூமியாகவும், மணல்மண்வளம் நிறைந்த பகுதியாகவும். வரலாற்றுக்காலத்தில் பூர்வீகக்குடிகளாகிய நாகர்கள் வாழ்ந்த பிரதேசமாகவும் சிறப்புப்பெறும் இப்பகுதியில் மக்கள் இன்றும் பல நாட்டார் பண்பாட்டு வழக்காறுகளைப் பேணிவருகின்றனர்.

 

உதவி அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்களாக பணியாற்றியாேர்
தொ இல பெயர் தொடக்கம்  வரை
உதவி அரசாங்க அதிபர்கள்
01 திரு. தா.சந்திரசேகரம் 20.10.1989 30.06.1990
02 திரு. மு.ஞானநேசன் 01.07.1990 18.03.1991
03 திரு. க.கேதீஸ்வரன் 19.04.1991 31.12.1992
04 திரு. க.கனகரட்ணம் 01.01.1993 05.05.1996
05 திரு. இ.சிவபுண்ணியம் 06.05.1996 31.12.1997
06 திரு. சி.பசுபதி 01.01.1998 30.06.1998
07 திரு. ப.வேலாயுதம்பிள்ளை 01.07.1998 01.09.2004
08 திரு. இ.த.ஐெயசீலன் 02.09.2004 03.05.2006
09 திரு. வே.வீரபத்திரபிள்ளை 09.05.2006 13.05.2007
10 திரு. மா.சிறீஸ்கந்தகுமார் 14.05.2007 09.09.2010
11 திரு. ந.திருலிங்கநாதன் 10.09.2010 13.06.2013
பிரதேச செயலாளர்கள்
12 திரு. ந.திருலிங்கநாதன் 14.06.2013 22.05.2015
13 திரு. க.கனகேஸ்வரன் 23.05.2015 03.09.2019
14 திரு. கு.பிரபாகரரமூர்த்தி 25.09.2019 26.08.2025
15 திருமதி. சுபலிங்கம் உஷா 03.09.2025 22.06.2026
16 திரு..F.C.சத்தியசோதி 23.06.2026 UP TO NOW
Scroll To Top