ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் உள்விவகார அலகு நிறுவப்படல் வேண்டும் என ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ,
எமது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் உள்விவகார அலகு (Internal Affairs Unit – IAU) நிறுவப்பட்டு, அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரதேச செயலகம் – வடமராட்சி கிழக்கு உள் விவகார அலகின்
தொலைநோக்கு
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற, நேர்மைத்தன்மை கொண்ட பொது சேவையை நிறுவிப் பேணுதல்.
பணிக்கூற்று
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் அனைத்து சேவைகளையும் நேர்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நெறிமுறைகளுடன் வழங்கி, இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதன் மூலம் வினைத்திறனான பொது மக்கள் சேவையை உறுதி செய்தல்.
உள்விவகார அலகின் தொழிற்பாடுகள்
1. பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல்
முறைப்பாடுகளாகச் சமர்ப்பிக்கக்கூடிய விடயங்கள்
1. இலஞ்சம் கோருதல் - ஏதேனும் அரச சேவையை வழங்குவதற்காக பணம் அல்லது வேறு சலுகைகளைக் கோருதல்.
2. அலுவலகப் பணிகள் அல்லது மக்களுக்கான சேவைகளை தேவையின்றி தாமதப்படுத்துதல்.
3. ஊழல் செயற்பாடுகள் - அதிகாரத்தை அல்லது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட அல்லது பிற நபர்களுக்கு நன்மை ஏற்படுத்தும் செயற்பாடுகள்.
4. கடமை தவறுதல் - ஒப்படைக்கப்பட்ட கடமைகளை முறையாக நிறைவேற்றாமை.
5. துஷ்பிரயோகச் செயற்பாடுகள் - அலுவலக வளங்கள், அதிகாரம் அல்லது பதவியைத் தவறாகப் பயன்படுத்துதல்.
6. பொறுப்பற்ற பணிச் செயற்பாடுகள் - அலுவலகப் பணிகளை பொறுப்புணர்வின்றி அல்லது விதிமுறைகளுக்கு முரணாக மேற்கொள்ளுதல்.
2. முறைப்பாடுகள் தொடர்பான தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
3. பொதுமக்களுடன் உத்தியோகபூர்வ தொடர்பாடல்களை மேற்கொள்ளுதல் மற்றும் நேர்மைத்தன்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
- தகவல்களை வழங்குவோரின் இரகசியத்தன்மை முற்றிலும் பாதுகாக்கப்படும்.
மேலும், ஒருவர் மீது திட்டமிட்டு பொய்யான அல்லது ஆதாரமற்ற முறைப்பாடுகளைச் செய்வது தொடர்பில், அவ்வாறு முறைப்பாடு செய்யும் நபர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடியமை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் உள்ளன என்பதனையம் தெரியப்படுத்துகின்றோம்.
தொடர்பு கொள்வதற்கான தகவல்கள்
Contact Information


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி, நேர்மையானதும் பொறுப்புக்கூறல் மிக்கதுமான பொது சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் உள்விவகார அலகு – Internal Affairs Unit (IAU) நிறுவப்பட்டு, அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 2026.10.06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு. F.C. சத்தியசோதி அவர்களால், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் உள்விவகார அலகு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில், உள்விவகார அலகின் தலைவர் திரு. க. ஜெயதாஸ், கணக்காளர் அவர்களும், நேர்மைத்திறன் அலுவலர் திரு. த. சிறிதரன், நிர்வாக உத்தியோகத்தர் அவர்களும், உள்விவகார அலகின் உறுப்பினர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.இவ்வலகு, எமது செயலகத்தில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஊழலற்ற பொது சேவை ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் செயற்படும்.“நேர்மையானதும் பொறுப்புக்கூறல் மிக்கதுமான பொது சேவையை முன்னெடுப்போம்.”உத்தியோகபூர்வ திறப்பு நிகழ்வின் சில பதிவுகள்...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
*உள் விவகார அலுவல்கள் அலகு
பிரதேச செயலகம் - வடமராட்சி கிழக்கு*
*வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான உள் விவகார அலுவல்கள் அலகின் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு*
திகதி: 14.10.2026
நேரம்: மு.ப. 10.00 மணி – பி.ப. 12.30 மணி
தலைமை: திரு. க. ஜெயதாஸ், கணக்காளர் மற்றும் அலகின் தலைவர்
வளவாளர்: திரு. த. சிறிதரன், நேர்மைத்திறன் அலுவலர், உள் விவகார அலுவல்கள் அலகு.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் உள் விவகார அலுவல்கள் அலகினால் 14.10.2026 அன்று கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு நடாத்தப்பட்டது. அலகின் தலைவர் திரு. க. ஜெயதாஸ் (கணக்காளர்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், கமக்காரர் அமைப்புக்கள், சமுர்த்தி வங்கிச் சங்கங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
உள் விவகார அலுவல்கள் அலகின் நேர்மைத்திறன் அலுவலர் திரு. த. சிறிதரன் (நிர்வாக உத்தயோகத்தர்) அவர்களால் உள் விவகார அலுவல்கள் அலகின் நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகள், இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு, அதிகார துஷ்பிரயோகம், ஆவண முறைகேடுகள், அரச வளங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், நலன் முரண்பாடு மற்றும் பொறுப்பற்ற பணிச் செயற்பாடுகள் தொடர்பாக விரிவான விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், இலஞ்சம் கோருதல், ஊழல் செயற்பாடுகள், அதிகார துஷ்பிரயோகம், கடமைகளை முறையாக நிறைவேற்றாமை, சேவைகளில் நியாயமற்ற தாமதம் மற்றும் பொறுப்பற்ற பணிச் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பாக முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது. இவ்விடயங்கள் உள்ளடக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களும் செயலமர்வில் பங்குபற்றியவர்களுக்கு வழங்கப்பட்டன.
அத்துடன், பொய்யான அல்லது ஆதாரமற்ற முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இதனுடன் இணைந்ததாக, காணொளி மூலமான விழிப்புணர்வு நிகழ்வும் நடாத்தப்பட்டு, நேர்மையான பொதுச் சேவை, இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதன் அவசியம், அரச உத்தியோகத்தர்களின் பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், கிராம மட்டத்தில் நேர்மைத்தன்மையை ஊக்குவிப்பதற்காக நடைமுறைப்படுத்தக்கூடிய ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை ஒரு மாத காலத்தினுள் சமர்ப்பிக்குமாறும், செயலமர்வில் பெற்றுக்கொண்ட அறிவைத் தத்தமது கிராமங்களில் உள்ள பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக அவர்களை அழைத்து விழிப்புணர்வுக் கூட்டங்களை நடாத்துமாறும் பிரதிநிதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இச்செயலமர்வின் மூலம் கிராம மட்ட அமைப்புக்களின் பங்களிப்புடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்தி, நேர்மையானதும், வெளிப்படையானதும், பொறுப்புக்கூறல் மிக்கதுமான பொதுச் சேவையை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
இச்செயலமர்வின் சில பதிவுகள்...